நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றியும் குவிந்திருந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து பொருளாதார நன்மைகளின் பலன்களும் நாட்டின் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்திலுள்ள மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
மேலும், எவர், எப்போது, எவ்வாறான பதவியில், இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, அதன்படி,இந்த நாட்டில் நீதி மற்றும் நியாயம் தொடர்பாக நாட்டு மக்களின் அதிக கவனத்தையும் நம்பிக்கையையும் பெறும் வருடமாக இந்த வருடம் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (06) முற்பகல் நடைபெற்ற டித்வா சூறாவளியால் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகள் சேதமடைந்த தனிநபர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வின்போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 150 பயனாளிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதுடன், அடையாள ரீதியாக ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கை 08/2025 இன் தொடர் இலக்கம் 12 இன் படி வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் 50 இலட்சம் ரூபாவில் முதல் தவணையாக தலா 20 இலட்சம் ரூபாவுக்கான காசோலைகள் இங்கு வழங்கப்பட்டன. தமது சொந்தமான காணியில் அல்லது முன்னர் வசித்த இடத்தில் வீடுகளை நிர்மாணிப்பவர்கள் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணியில் வீடுகளை நிர்மாணிப்பவர்கள் இதில் உள்ளடங்குவர்.
மேலும், வரவுசெலவுத்திட்ட சுற்றறிக்கை 08/2025 இன் தொடர் இலக்கம் 14 இன் படி, வீடுகள் பகுதியளவு சேதமடைந்தவர்களுக்கு மதிப்பீட்டின்படி வீடுகளை புனரமைக்க இழப்பீடு வழங்கப்பட்டது. மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீட்டை குறித்த சுற்றறிக்கையின்படி அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபா வரை வழங்க முடியும் என்றாலும், உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கத்தில், பயனாளிகளின் விருப்பப்படி, மதிப்பீடு மேற்கொள்ளாமல் 05 இலட்சம் ரூபா கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் பயனாளிகளுக்கு 05 இலட்சம் ரூபா பகுதியளவு சேத இழப்பீட்டுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக தமது வர்த்தக நிலையங்கள் அல்லது இயந்திரங்கள் சேதமடைந்தவர்களுக்கு தமது வர்த்தகங்களை மீண்டும் தொடங்க தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடும் இதன்போது வழங்கப்பட்டன. சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவு என்ற எந்தவொரு வேறுபாடும் இன்றி, பதிவுசெய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்களுக்கும் அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க , ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் அடிப்படைப் பொறுப்பாகும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பொருளாதாரம் வீழ்ச்சியடையும்போது எதிர்கொள்ளும் அழிவுகளையும் பிரச்சினைகளையும் நேரடியாக நாம் அனுபவித்தோம். இந்நாட்டு மக்கள் மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையாலும், எரிபொருளுக்காகவும், பால் மாவுக்காகவும் வரிசைகளில் நின்று துன்பப்பட்டனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment