காரைதீவில் ஆடைத் திட்டம் தொடக்கம் : பொது–தனியார் கூட்டாண்மையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்
நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், குறிப்பாக இளைஞர்–யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் இலக்காகக் கொண்டு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையிலான சபையினர் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில், டியாரோ முதலீட்டு லிமிடெட் குழுமத்துடன் இணைந்து பொது–தனியார் கூட்டாண்மையில் ஆடைத் தொழிற்சாலை திட்டம் இன்று (20 பிப்ரவரி 2026) முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
காரைதீவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறிய அளவிலான ஆடைத் தொழிற்சாலையின் தொடக்கவிழாவில், அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நித்மினி, டியாரோ முதலீட்டு லிமிடெட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரசன்ன சஞ்சீவ, பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி நிரஞ்சன் வர்ணசூரிய, பிரதம செயல்பாட்டு அதிகாரி அருண் குமார், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி. அருணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நாடா வெட்டி தொழிற்சாலையை திறந்து வைத்தனர்.
இந்தத் திட்டம் பொதுச்சொத்துக்களை முறையாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தி, அவற்றை மக்களின் நலனுக்காக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, பிரதேச யுவதிகளுக்கு அருகிலேயே நிலையான தொழில்வாய்ப்புகளை வழங்கி, குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும், இத்திட்டம் பிராந்திய தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய கட்டமாக அமையவுள்ளதாகவும், எதிர்காலத்தில் தொழிற்திறன் பயிற்சிகள், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம் ஆகியவற்றின் மூலம் உள்ளூர் ஆடைத் துறையை நவீனமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.
பொது–தனியார் கூட்டாண்மையின் சிறந்த முன்னுதாரணமாக அமையும் இந்த ஆடைத் தொழிற்சாலை திட்டம், காரைதீவு பிரதேசத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், இளைஞர்களின் சுயநிறைவு வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும் இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், டியாரோ முதலீட்டு லிமிடெட் குழும பணிப்பாளர் சபையினர், காரைதீவு பிரதேச சபை முன்னாள் மற்றும் இந்நாள் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment