போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு



 


நூருல் ஹுதா உமர்


போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் “போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டம்” 03.03.2026 செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பிரதேச செயலக முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் இளைஞர் தலைமுறையின் எதிர்கால நலன் ஆகியவற்றை மையப்படுத்தி விழிப்புணர்வு உரைகள், விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சமூகத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்குவதில் பொதுமக்கள், பெற்றோர் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், போதைப்பொருள் பரவலைத் தடுக்க அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக இளைஞர்கள் தவறான பாதைகளில் செல்லாமல் பாதுகாக்க குடும்ப மற்றும் சமூக பொறுப்பு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் கலந்து கொண்டார். அதேபோன்று மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், சம்மாந்துறை, அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் உதவிப் பிரதேச செயலாளர்கள், கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிந்தவூர் பிரதேச சபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடகிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும் வளவாளருமான எம்.எம்.ஜி.பி.எம். ரசாட், எடின்பரோ பிரைவேட் லிமிடெட் நிறுவன பிரதிநிதி எம். ரிபாஸ், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பயிற்சிக் கூட்டத்தைத் தொடர்ந்து, இவ்வருடத்திற்கான இப்தார் நிகழ்வும் ஆன்மிகத் ததும்பலுடனும் ஒற்றுமை உணர்வுடனும் நடைபெற்றது. சமூக ஒற்றுமையையும், போதைப்பொருள் இல்லா ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது.