அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வட பகுதியில் அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில், அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான B-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நேரப்படி காலை 11:20 மணியளவில், எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக விமானம் விபத்தில் சிக்கியது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அவசரக்கால மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அமெரிக்க விமானப்படையின் மிக முக்கிய மற்றும் வலிமைமிக்க போர் ஆயுதமாக இந்த B-52 ரக விமானங்கள் கருதப்படுகின்றன.
1950-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் இந்த நீண்ட தூர உத்திசார் குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எரிபொருள் நிரப்பாமல் தொடர்ந்து 8,800 மைல்கள் வரை பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.சாதாரண வெடிகுண்டுகள் மட்டுமின்றி, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது.
வியட்நாம் போர், வளைகுடாப் போர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சமீபத்திய ஈரான் உடனான மோதல்கள் வரை பல்வேறு முக்கிய இராணுவ நடவடிக்கைகளில் இந்த B-52 விமானங்கள் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


Post a Comment
Post a Comment