நூருல் ஹுதா உமர்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி. ரத்நாயக்க அவர்கள் நேற்று (06) சம்மாந்துறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டார்.
இதன்போது, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் நேரில் பார்வையிடப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நடைபாதையை விரிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், மோட்டார் சைக்கிள்களுக்கென தனியான பாதையை அமைப்பது, எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப வீதி கட்டமைப்பை மேம்படுத்துவது, ஹிஜ்றா சந்தி சுற்றுவட்ட அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பது மற்றும் ஹிஜ்றா சந்தியிலிருந்து அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி வரை உள்ள பிரதான வீதியை நான்கு வழிப்பாதையாக அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், கல்வி மற்றும் அரச நிறுவனங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வீதிப் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் கணிசமாக மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கள ஆய்வு மற்றும் கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அக்கரைப்பற்று அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில், கல்முனை அலுவலகத்தின் நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஸ்மீர், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எச்.எம். காலித், எம்.ஆர். ஆஷிக் முஹம்மட், எம்.ஐ.எம். றிஸ்வி கான், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம். முஸ்தபா, ரீ. சங்கீதன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)

Post a Comment
Post a Comment