
(எஸ்.ரி.ஜமால்டீன்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் லொக்கரை (லாச்சை) உடைத்து உள்ளே இருந்த 3 இலட்சத்து 71 ஆயிரம் ரூபா (371000.00) பணத்தை நேற்று (17) பட்டப்பகலில் கொள்ளையிட்ட சந்தேக நபரை சீசீரீவீ கமராவின் உதவியுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3இலட்சத்தி 64 ஆயிரம் பணமும் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
வெளிநாடு ஒன்றில் பணிபுரியும்; அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் அவரது குடும்பத்தினருக்கு 3இலட்சத்தி 76 ஆயிரம் ரூபா பணத்தை அனுப்பியுள்ளர்.
பணத்தை அனுப்பியவரின் மனைவி பணத்தை பெறுவதற்காக முச்சக்கர வண்டி ஓட்டுனரான குடும்ப உறவினர் ஒருவரை ; காசோலையை கொடுத்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அக்கரைப்பற்று இலங்கை வங்கி கிளையில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு வருமாறு அனுப்பியுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஓட்டுனர் வங்கியில் பணத்தை பெற்றுக் கொண்டு பணத்தை முச்சக்கர வண்டி லொக்கரில் வைத்து பூட்டிவிட்டு முச்சக்கர வண்டியை அட்டாளைச்சேனை நோக்கி செலுத்தி சென்று அங்கு அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நிறுத்தி வைத்துவிட்டு பணத்தில் 5 ஆயிரம் ரூபாவை எடுத்து அவர்களுக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக கடை ஒன்றிற்கு முச்சக்கர வண்டி ஓட்டுனர் சென்றுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த கொள்ளைகாரன் முச்சக்கரவண்டியின் லொக்கரை உடைத்து உள்ளே இருந்த பணம் 3 இலட்சத்து 71 ஆயிரத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.முச்சக்கர வண்டி ஓட்டுனர் பொருள் கொள்வனவின் பின் வந்து பார்த்த போது பணம் கொள்ளையிடப்பட்டதை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸ் பெரும்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பத்காரி ஆர்.எம்.இப்றாகீம் தலைமையிலான பொலிஸ் குழவினர் முச்சக்கரவண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீரீவீ கமராவில் இருந்து கொள்ளையிட்ட நபரை அடையாளம் கண்டு அவரை இன்று அதிகாலை கைது செய்து அவரிடமிருந்து 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபா பணத்தையும் மீட்டுள்ளனர்.
பணத்தை கொள்ளையிட்ட நபர் அக்கரைப்பற்றிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதாகவும் அந்நபர் அக்கரைப்பற்று பழைய பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரெனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொள்ளையிட்ட பணத்தை வைத்திருந்த தனது தாய்,மனைவி மற்றும் ஒருவரையும் விசாரணை செய்து வருவதாகவும் மேலதிக விசாரணையின் பின் சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
