சம்பள உயர்வை எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் மலையக மக்கள்



கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் தங்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் சித்திரை புத்தாண்டு, தீபாவளி , மற்றும் தைப் பொங்கல் என ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போனதாக கூறுகிறார்கள்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஏனைய தனியார் துறை போன்று இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதந்தம் ரூபா 2500 சம்பள அதிகரிப்பு கிடைக்கும் என அறிவித்திருந்தார்.
இந்த மாதத்துக்கான சம்பளத்தை தொழிலாளர்கள் கடந்த 10ம் திகதி பெற்றிருந்த போதிலும் அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த சம்பள அதிகரிப்புக்கு தோட்ட நிர்வாகங்கள் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தொழிலாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்கின்றார் மலையக சமூக ஆர்வலரான பி. முத்துலிங்கம்.
தோட்ட நிர்வாகங்கள் அரசமயமாக்கப்படல் வேண்டும், திறைசேரி மூலம் நிதியை பெற்று சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படியான நிலை ஏற்படுமானால் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படும் என அரசாங்கத்தின் மலையக பங்காளி கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னனி கூறுகின்றது.
எதிர்வரும் 26ம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது இது தொடர்பான மசோதாவை தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாடாளுமன்றத்தில் முன் வைத்து, அது நிறைவேற்றப்படும் என மலையக மக்கள் முன்னனியின் நிதிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அருணாசலம் அரவிந்தகுமார் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார்.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான இரு வருட கூட்டு ஒப்பந்தத்தின்படி தோட்ட நிர்வாகங்களால் செலுத்தப்படுகின்ற ஊழியர் சேமலாபநிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான கொடுப்பனவு அடங்கலாக நாளந்த சம்பளம் 687 ரூபா 50 சதம் வரையறுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31ம் திகதியுடன் காலாவதியானபோதிலும் தொழிலாளர்களினால் முன் வைக்கப்பட்டுள்ள நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை காரணமாக 9 மாதங்கள் கடந்தும் அந்த ஒப்பந்தமும் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை.
சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்ட நிர்வாகங்களை உள்ளடக்கிய முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 10 தடவைகளுக்கு மேல் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தாலும் இதுவரையில் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையிலே அதில் அரசாங்கம் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.