தைப்பொங்கல் திருநாளில் களியாட்டங்களைத் தவிர்த்திடுக – இந்து மாமன்றம்



கடந்த தைப்பொங்கலுக்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டாலும் ஒரு வருடம் கடந்தும் தமிழ் மக்கள் இன்னமும் பல ஆதங்கங்களுடன் வாழ்ந்துவருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

நாளை மலரவுள்ள தைத்திங்களை முன்னிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்துள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சொந்த இடங்களில் குடியமர முடியாதுள்ளதாகவும் அவர்களுக்கு சொந்த நிலத்தில் குடியிருக்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கானவர்கள் விசாரணைகள் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் அகில இலங்கை இந்து மாமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் கையளிக்கப்பட்டிருந்தாலும் வடமாகாண சபையைப் பொறுத்தவரை அம்மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளூடாக அவற்றை அனுபவிக்கும் வாய்ப்புக்கள்கூட மறுக்கப்பட்டுள்ளதாக மாமன்றம் விடுத்துள்ள பொங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாணத்தில் கலாசாரம் கல்வி பொருளாதாரம் கட்டிக்காப்பாற்றப்பட்டு மேம்படுத்தப்படவும் குடிநீர் மாசுபடுத்தலால் ஏற்படுகின்ற பிரச்சினையைத் தீர்க்கவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண முதல்வரிடம் இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தன்னைக் கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழ் இளைஞரை மன்னித்த ஜனாதிபதியின் பெருந்தன்மையைப் பாராட்டியுள்ள இந்து மாமன்றம் அதே அன்புப் பார்வையை பல சிவாச்சாரியார்கள் விடுத்த வேண்டுகோளின்படி ஒரு சிவாச்சாரியாருக்கேனும் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த சிவாச்சாரியாரை துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் துன்புறுத்தப்பட்டிருப்பதை சட்ட வைத்திய அதிகாரியின் சான்றிதழ் உறுதிப்படுத்துவதாகவும் மாமன்றம் அறிவித்துள்ளது.

தைப்பொங்கலுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் மற்றும் பொதுச் செயலாளர் முத்தையா கதிர்காமநாதன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மீண்டும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுயகௌரவத்துடனும் தன்மானத்துடனும் வாழும் நிலை வரும்வரை இன நல்லிணக்கத்திற்கான எவ்வித முன்மொழிவுகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரிய பகவானுக்கு நன்றிக்கடன் செலுத்தும் கருத்தாழம் மிக்க தைப்பொங்கல் திருநாளில் களியாட்டங்களைத் தவிர்த்து பிரார்த்தனையில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தையும் அகில இலங்கை இந்து மாமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.