பாகிஸ்தானில் யூ டியூப் மீதான தடை நீக்கம்




உலக அளவில் காணொளிகளைப் பகிரும் முன்னணி இணையதளமான யூ டியூபுக்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்துவந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இஸ்லாமை இழிவுபடுத்தக் கூடிய காணொளியை பகிர்ந்ததாகக் கூறி யூ டியூப் இணையதளம் பாகிஸ்தானுக்குள் தடை செய்யப்பட்டிருந்தது.
யூ டியூபை தற்போது நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பாகிஸ்தானுக்கான பிரத்யேக யூ டியூப் இணையதளத்தை வடிவமைத்து செயற்பட வைத்திருப்பதால், யூ டியூப் இணையதளம் மீதான தடை இனிமேல் தேவையில்லை என்று பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் யூ டியூப் இணையதளத்தில் இருக்கும் காணொளிகளை அதிகாரிகள் வடிகட்ட வழியிருப்பதாக நம்பப்படுகிறது.
அதேசமயம், யூ டியூப் இணையதளம் தொடர்பில் பாகிஸ்தான் அரசுக்கும் கூகுள் நிறுவனத்துக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் இருக்கும் விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து மேலதிகமாக வெளிப்படைத் தன்மை தேவை என்று பாகிஸ்தானின் இணைய சுதந்திரத்திற்கான செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.