
குற்றப் புலனாய்வு திணைக்களம் நடத்தி வரும் விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டவைகளை வழங்காது இராணுவம் விசாரணைகளுக்கு தடையேற்படுத்துமாயின் இராணுவ தளபதிக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் 185 வது பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யுமாறு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.
பிரகீத் எக்நேலியகொட காணாமல் போனமை சம்பந்தமான அடிப்படை வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
பிரகீத் எக்நேலியகொடவை கடத்திச் சென்று கொலை செய்த இராணுவ அதிகாரிகள் சார்பில் இன்று இராணுவச் சட்டப்பிரிவின் சட்டத்தரணி ஆஜராகினார். அவர் சந்தேக நபர்களான இராணுவத்தினர் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதே நீதவான் இதனை கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் இராணுவத்திற்கு ஆஜராகும் உரிமையில்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் செய்ய வேண்டியது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதல்ல. விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கேட்பதை அவர்களுக்கு வழங்குவதையே இராணுவம் செய்ய வேண்டும்.
இதனை விடுத்து விசாரணைகளுக்கு இராணுவம் தடையேற்படுத்தினால், குற்றவியல் தண்டனை சட்டத்தின் 185 பிரிவின் கீழ் இராணுவ தளபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபர்கள் சார்பில் இராணுவம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிறையில் இல்லாது அவர்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான காரணத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
