கிரிக்கெற்றிலும் மோசடி




இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட வைக்க முயற்சித்தாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவிற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் இன்று வருகை தந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸிற்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் தம்மால் நிதிக்குற்ற விசாரணைக்கு அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என அஞ்சலோ மெத்யூஸ் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று (19) காலை 9.45 மணியளவில் தமது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவிற்கு அஞ்சலோ மெத்யூஸ் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை அணியின் முகாமையாளர் ஜெப்ரி வவுடர்ஸிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினர் நேற்று (18) வாக்கு மூலம் பதிவு செய்திருந்தனர் .
இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் உதவிப் வலைப்பந்து வீச்சாளர் கயான் விஷ்மிஜித் ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது