இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 13 வது உச்சி மாநாடு



“நீதியையும், அமைதியையும் நிலை நிறுத்த ஒற்றுமையுடன் தோல் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) 13 வது உச்சி மாநாடு துருக்கி தலைநகர் இஸ்தம்பூளில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
அவ்வமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்கள் நடாத்திய உச்சிமாநாட்டின் ஆயத்த கூட்டம் நேற்று நிறைவு பெற்றது.
சவுதி மன்னர் சல்மானின் தலைமையில் நடைபெறும் மேற்படி உச்சி மாநாட்டில் 30 க்கும் மேற்பட்ட அரபு தலைவர்கள் பங்கேட்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரஸ்தாப உச்சி மாநாட்டில் பாலஸ்தீன் பிரச்சினை, அரபு-இஸ்ரேல் மோதல், முஸ்லீம் உலகில் மூண்டுள்ள மோதல் சூழ்நிலை, அரபு உள் விவகாரங்களில் ஈரானிய தலையீடு, உலகை உலுக்கி வரும் அகதிகள், இடம்பெயர்வோர் பிரச்சினை, பொதுவான முஸ்லிம் சமூகம் தொடர்ப்பிலான பிரச்சினை, உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்யப்படும் இஸ்லாம் பற்றிய உணர்வு, பயங்கரவாதத்தை அழித்தொழித்தல், ஏழ்மையை ஒழித்தல், முஸ்லிம் உலகில் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒத்துழைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப் படவுள்ளதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் இயாத் மதனி தெரிவித்துள்ளார்.
அரபு உலகம், ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணை கண்டம், பால்கன் (போஸ்னியா மற்றும் அல்பேனியா) உள்ளிட்ட பிராந்தியத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஐம்பத்தேழு நாடுகளை அங்கத்துவமாக கொண்டதே இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இது 1969 செப்டம்பர் 25 இல் நிறுவப்பட்டது. மேற்படி அமைப்பின் தலைமையகம் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.