இயற்கை இடரில் இலங்கையில் இறந்தோர் 104



வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளம் வடிந்துள்ள பிரதேசங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள 21,484 பேர் 210 தற்காலிக முகாம்களில் தற்போது தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கான நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர வெள்ளம் வடிந்துள்ள பகுதிகளில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும், களுத்துறை, கேகாலை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மண்சரிவு ஏற்படக்கூடிய அறிகுகள் அடையாளங் காணப்படும் பட்சத்தில் உடனடியாக அந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்வது சிறந்ததாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவளை, பொது இடங்களை துப்புரவு செய்த பின்னர் மக்களின் வீடுகளையும் துப்புரவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்பொருட்டு 2000 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், பணிப்பாளருமான மேஜர் வஜிர குமாரதுங்க கூறினார்.
கடற்படை வீர்ர்கள் தொடர்ந்தும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
களனி ஆற்றை அண்மித்துள்ள கால்வாய்கள் மற்றும் வடிகாண் கட்டமைப்புகளையும், பொது இடங்களையும் கடற்படையினர் துப்புரவு செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.