புலிகள் அமைப்பின் வால் மட்டுமே 30 வருட யுத்தத்தின் மூலம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் ஏனைய பகுதிகள் இன்னும் இருக்கின்றன என்பது மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் பாரிய வலைப்பின்னலுடன் செயற்பட்டும் வருகின்றது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சார் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
புலிகளின் செயற்பாட்டாளர்கள் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வடிவங்களில் செயற்பட்டு வருகின்றனர். அதில் ஒரு வடிவம்தான் சமஷடிக் கோரிக்கை. இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன.
பிரபாகரனை இல்லாதொழிக்க சந்திரிக்காவும் முயற்சி எடுத்தார். அதேபோன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முயற்சித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த யுத்த நிறுத்த உடன்படிக்கைதான் புலிகளுக்கு பாரிய பின்னடைவைக் கொடுத்தது என அவ்வமைப்பின் அன்றை ஆலோசகராக இருந்த அண்டன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறு முயற்சித்தவர்களுள் ஒருவர். அவரைப் போன்ற முயற்சித்தவர்களுள் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் உள்ளார். யுத்தம் நிறைவடைய இறுதித் தருவாயில் பாதுகாப்பு அமைச்சராக காணப்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் யுத்தத்தில் பங்கெடுத்தவர்தான்.
இத்தனை பேரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கின்றது. இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தேவை. இவ்வாறிருக்கையில் ஏன்? மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை மாத்திரம் தூக்கிப் பிடிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

