பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் இல்லாத இடத்தில் பொதுபல சேனாவைப் பற்றி கருத்துத் தெரிவிப்பதை விட்டு விட்டு, முடியுமானால் திறந்த விவாதமொன்றுக்கு வருமாறு பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சவால் விடுத்தார்.
கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நேற்று முன்தினம் (09) தனியார் தொலைக்காட்சியொன்றின் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பொதுபல சேனா தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பொதுபல சேனாதான் பிரதான காரணம். சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து அகற்றிவிடுவதற்கு, நோர்வேயின் நிதி உதவியில் பொதுபல சேனா செயற்பட்டது. பொதுபல சேனாவை திட்டமிட்டு செயற்படுத்தியது தற்போதைய அரசாங்கம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் விமல் வீரவங்ச குறிப்பிட்ட கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஞானசார தேரர் இவ்வாறு விவாதத்துக்கு அழைப்பு விடுத்தார்.
மஹிந்தானந்த அளுத்கமகே, மனுஷ நாணயக்கார, டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர போன்ற அரசியல்வாதிகளும், கெவிந்து குமாரதுங்க, தயான் ஜயதிலக்க போன்ற அரசியல் ஆய்வாளர்களையும் நான் திறந்த விவாதமொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுகின்றேன்.
எம்மைப் பற்றி அறிந்துகொள்ளாமல் வெளியில் இருந்துகொண்டு கருத்துக் கூறுவதை விடுத்து, முடியுமானால் நேரடியாகவே எம்முடன் விவாதத்துக்கு வாருங்கள் எனவும் தேரர் அழைப்பு விடுத்தார்.

