'சர்வதேச விசாரணையே அவசியம்' தமிழ் மக்கள் பேரவை



இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் வல்லுனர்களான மோனிக்கா பின்டோ மற்றும் ஜுவான் இ மென்டஸ் ஆகிய இருவரையும் சந்தித்த தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் சிலர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேச விசாரணையே அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் கட்நத காலங்களில் உள்நாட்டு ஆணைக்குழுக்கள் நடத்திய விசாரணைகளில் எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதால் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
பொறுப்பு கூறலுக்கான சர்வதேச விசாரணையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றுக்கு சர்வதேசம் வழியேற்படுத்த வேண்டும் என்று ஐநா அதிகாரிகளிடம் தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் கோரியிருக்கின்றோம் என்று அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவரான பேராசிரியர் சிற்றம்பலம் தெரிவித்தார்.
இலங்கைக்கான 8-நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஐநா அதிகாரிகள் வடபகுதிக்கான தமது விஜயத்தின்போது பல இடங்களையும் சென்று பார்வையிட்டுள்ளனர். பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
எனினும், அதுபற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. கடந்த மாதம் 29 ஆம் திகதி தொடங்கிய அவர்களின் பயணம் சனிக்கிழமை முடிவடையும் போது, செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.