நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாவது அமர்வு கடந்த சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் உள்ள டேபா மண்டபத்தில் ஆரம்பமானது. அதில் ஒய்வு பெற்ற அதிபர் ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . அவர் மேலும் எடுத்துக் கூறியதாவது,
மட்டக்களப்புத் தமிழ் சமூகத்தை பாதித்த கடந்த கால சம்பவங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனுசரிக்க வேண்டிய அணுகுமுறைகள்.
பெரும்பான்மையானோரை சிறுபான்மையேராக மாற்றும் அணுகுமுறை:
இந்த விடயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இதற்கு 1ம் இலக்கம் இடப்படுகின்றது. ஏன் முக்கியத்துவம் என்பதைச் சொல்வது எனது கடமையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மைச் சமூகமாகவுள்ள தமிழ் சமூகத்தினரை சிறுபான்மையினராக்கும் குடியேற்ற நடவடிக்கைகள் இன ஒடுக்குமுறையின் ஒரு வடிவம் என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
இது 1951ம் ஆண்டு திரு D.S சேனநாயக்கா அவர்களால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டது. வடக்கே வெருகல் ஆறு தெற்கே கும்புகன் ஆறு, மேற்கே பதியத்தலவை, கிழக்கே கடல். இந்தப் பிரதேசமே வரலாற்றுக் காலம் முதல் மட்டக்களப்பு என அழைக்கப்பட்டு வந்தது. இவ் வேளையில் தான் அப்போது கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கேட் முதலியார், M.S காரியப்பர் என்பவரின் பூரண ஒத்தாசையுடன் மட்டக்களப்பின் மேற்குப் பகுதில் இருந்த அடர்ந்த காடுகளை அழித்து கேகாலை முதலிய சிங்களப் பிரதேசங்களில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றினார்கள்.
இக்குடியேற்றங்களுக்குள்ளே மட்டக்களப்புத் தமிழர் மக்களின் புராதன நிலங்களும் அகப்பட்டுக் கொண்டன. அதன் பரப்பளவு பற்றி சரியாகச் சொல்ல முடியவில்லை. மேலெழுந்த வாரியாக சொல்லப்போனால் சுமார் 25000 ஏக்கர் அளவிலான வயற்காணிகள். இக்காணிகள் அனைத்தும் அரசாங்கத்தின் ஆதரவுடன் குடியேற்றவாசிகளால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டன. (உ-ம்:பறங்கியர் வட்டை, கல்லாத்தார் வெட்டை, புளியன்குளத்து முன்மாரி, கோணாவளை, கோம்பானை, மானுரிச்சகல் போன்றவை ) அன்று முதல் மட்டக்களப்பு தமிழர்கள் வறியவர்களாக மாற்றப்பட்டார்கள். இலங்கைப் பிரஜைகள் எவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி வாங்கி குடியேறுவதில் மட்டக்களப்பு தமிழர்கள் எவருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் மாவட்டத்திலுள்ள அரச காணிகளில் அரசாங்கம் திட்டமிட்டு குடியேற்றுவதையும், சிங்கள மக்கள் குடியேறுவதற்கு பக்கபலங்களை அளித்துவிட்டு பராமுகமாக இருக்கும் இம் அணுகுமுறை கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கான அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள போதும் அது பொம்மையாக செயற்படுவது நிறுத்தப்பட வேண்டும். சாதாரண பொதுமகன் ஒருவர் இதற்கு எதிராக நீதி கேட்கின்ற நடைமுறைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது போன்ற ஓரவஞ்சனை நடவடிக்கைகளினால் நாம் முன்னர் திருகோணமலையை இழந்தோம். பின்னர் அம்பாறையையும் இழந்தோம். இப்போது எஞ்சியுள்ளது மட்டக்களப்பு மட்டுமே. எங்கள் எதிர்கால சந்ததியினருக்காகவேனும் நாங்கள் மட்டக்களப்பையும் இழந்து அடிமைகளாக அழிந்து போக முடியாது என சூளுரைக்கின்றோம். இக்கூற்றினை தங்கள் செயலணி அறிக்கையில் கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.
தண்ணீர் பங்கீடு:
மட்டக்களப்பு மாவட்டம் 2750 சதுரமைல் பரப்பை உடையதாக இருந்தது. பின்பு அதில் பரந்த நிலப்பரப்பை பிரித்து 1960களில் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதிலும் சுமார் 750 சதுரமைல் பரப்பு தனிச்சிங்களத் தொகுதியாக மாற்றப்பட்டது. மட்டக்களப்பில் ஓடிய பட்டிப்ளை ஆற்றுக்கு கல்லோயா என்று பெயர் வைத்துவிட்டு குடியேற்றத் திட்டத்திற்கும் கல்லோயா திட்டம் என பெயர் வைத்து விட்டனர். அந்த ஆற்றினை மறித்துக்கட்டி இங்கினியாகல என்ற குளத்தில் தேக்கப்படும் நீரில் 90%அம்பாறை மாவட்டத்திற்கும் 10% மான நீர் தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. தற்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரையின் பெரும்பாலான கிராமங்களின் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றார்கள். ஆனால் கேகாலையில் இருந்து குடியேறிய மக்களுக்கு தாராளமான நீர் வழங்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி அம்பாறை மாவட்ட விவசாயக் காணிகளுக்கு இரண்டு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கு போதியளவு நீர் வழங்கப்படும் அதே வேளை மட்டக்களப்பு மாவட்ட வயற்காணிகளுக்கு ஒரு போகம் செய்வதற்கும் ஒழுங்காக நீர் வழங்கப்படுவதில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூரின் மேற்கேயிருக்கும் 14ம் குடியேற்ற கிராமத்தில் கல்லோயா நீர்ப்பாசன திட்டத்தின் கீழான வாய்க்கால் ஒன்று உள்ளது. ஆனால் 50வருட காலமாக அந்த வாய்க்காலில் நீர் வழங்கப்பட்டதை நான் கண்டதே இல்லை.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்தையும் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்டு நீர்விநியோக கட்டமைப்பு ஒன்றை உடன் நிறுவவேண்டும். குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரைக்கணக்கெடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இத்தனை ஏக்கர் பாசனம் என்றும் அம்பாறைக்கு இத்தனை ஏக்கர் பாசனம் என்றும் சமமாக நீரை பங்கீடு செய்ய வேண்டும். அதே போன்று இவ்விரு மாவட்டங்களுக்கும் குடிநீர் விநியோகத்தின் அளவும் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் இத்தனை DMC தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதனை கணக்கெடுத்து அதனை மக்களுக்குத் தெரியப்படுத்தபடவும் வேண்டும். எனவே இன நல்லிணக்கத்தைப் பாதித்த கடந்தகால சம்பவங்களை தவிர்ப்பதற்காக அரசாங்கம் இவ்விடயம் தொடர்பாக பாரபட்சமற்ற அணுகுமுறை ஒன்றினை கையாள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கின் அரசியல் அதிகாரம்:
இன நல்லிணக்கத்தைப் பாதிக்கும் மிக முக்கிய காரணியாக இவ்விடயம் அமைகிறது. 15ம் நூற்றாண்டுவரை மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சமூ கத்தினரை விட வேறு எந்த சமூகத்தினரும் பெருமளவில் வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மட்டக்களப்பிற்கு தெற்கே தமிழ் வன்னிமைகளே ஆட்சி செலுத்தி வந்துள்ளன. ஆனால் ஒரு முஸ்லிம் வன்னிமையும் ஆட்சி புரிந்தமைக்கான வரலாறு எதுவும் இல்லை. சிற்றரசுகளான இவ்வன்னிமைகள் மீது மேலாண்மை செலுத்திய கண்டிய மன்னரால் 1627ம் ஆண்டில் முஸ்லிம்கள் மட்டக்களப்பில் குடியேற்றப்பட்டனர்.
இலங்கையில் முதல் முதல் உத்தியோகபூர்வமான சனத்தொகை கணக்கெடுப்பு 1881ல் நடைபெற்றது. இதில் கிழக்கில் 59% மான தமிழர்கள் இருந்தனர். 1956 ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் இதில் வீழ்ச்சி காணப்பட்டுக் கொண்டே வருகிறது. 1956ம் ஆண்டு 48% மாக இருந்த தமிழரின் சனத்தொகை தற்போது 40%மாக குறைந்து வீழ்ச்சி கண்டமைக்கு அரசின் செயற்பாடுகளே காரணமாயின. இன நல்லிணக்கத்திற்கு ஒரு பாரிய சவாலாக இந்த சனத்தொகை வீழ்ச்சி காணப்படுகின்றது. இதன் காரணமாக கிழக்கின் பெரும்பான்மையானோராக இருந்த தமிழ் சமூகத்தினரை சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம் சமுகத்தினர் ஆளும் நிலை ஏற்பட்டுள்ளது . அவர்கள் ஆள்வதில் பிரச்சினையேதும் இல்லை. ஆனால் அவர்களின் கடந்த நான்கு வருட செயற்பாடுகள் சிங்கள அரசுகளின் செயற்பாடுகள் போன்றே உள்ளன. வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி என்பவற்றில் பாரதூரமான பாதிப்புக்களையும் புறக்கணிப்புகளையும் செய்கின்றனர். இதற்குத்தானா தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் தமது உயிர்களை ஆகுதி ஆக்கி மாகாணசபையைப் பெற்றெடுத்தனர்? நாங்கள் ஆயிரக்காணக்கான ஆண்டுகளாக பிறந்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக தமிழ் இளைஞர்கள் நெருப்பாற்றில் நீந்தினார்கள். அதன்மூலம் ஏற்பட்ட தமிழ்நாட்டினுடைய அழுத்தம் காரணமாக இந்தியா தலையிட்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை ஆட்சியை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது. பின்பு அரசியல் சூழ்ச்சி காரணமாக கிழக்கு மாகாணத்தைப் பிரித்துவிட்டனர். இதன் பின் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியையும் தமிழரிடம் இருந்து பறித்து விட்டனர். உரிமை வேண்டிப் போராடிய தமிழ் மக்களில் 8% மானோரை அழித்துவிட்டதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் இன நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாக உள்ளது. எனவே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையினர் என்பதும், அவர்களே கிழக்க மாகாணசபைக்காக போராடினார்கள் என்பதும் இனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக இன்று அரசியல் அதிகாரத்தை இழந்து நிற்கின்றார்கள் என்பதுமான உண்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
எனவே கிழக்கு மாகாணசபையில் உள்ள 37 உறுப்பினர்களில் 48% மானது தமிழ் மக்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் அழிக்கப்பட்டவர்களை மீள் எழுப்பிக் கொடுக்க முடியுமா? ஏனெனில் இந்த வீழ்ச்சி திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டது. அதற்கு ஏதாவது ஒரு வகையில் பரிகாரம் காணப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான நல்லிணக்கத்தை கிழக்கில் காணமுடியும். பரிகாரம் காண்பதற்கான வழிமுறைகள் பல உள்ளன. எனவே சமூகங்களைப் பாதித்த கடந்தகால சம்பவங்களை தவிர்ப்பதற்காக கிழக்கு மாகாண சபையில் 48% இட ஒதுக்கீடு செய்வதற்கான அணுகுமுறைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். கறையான் புற்றெடுக்க பாம்பு குடியேறிய கதையாக எந்தவொரு தமிழனும் ஒத்துப்போக மாட்டான். இந்நிலை தொடர்ந்தால் இன நல்லிணக்கம் என்பது எட்டாக்கனியாகவே மாறிவிடும்.
இழப்பீடுகள்:
யுத்தத்தின் கோரவிளைவுகளில் ஒன்று பெண்களை விதவைகளாக்கி விட்டமை. இலங்கையின் வடக்கு கிழக்கில் சுமார் 122,000 விதவைகளை யுத்தம் பிரசவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான திட்டவட்டமான புள்ளி விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்தியதாக தகவல்கள் இல்லை. அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, யப்பான் போன்ற நாடுகள் பெருமளவு நிதியினை வழங்கியதாகவும் வழங்கவுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது. இவை முழுவதும் உட்கட்டமைப்பிற்கே செலவிடப்படுகிறது. பசியோடு தவிப்பவனுக்கு பாதைகள் கட்டிடங்கள் முக்கியமா? அல்லது வாழ்வாதாரம் முக்கியமா என்பதைக்கூட அரசாங்கத்தால் அறியமுடியாமல் உள்ளது. எனவே பெறப்படும் நிதிமுழுவதும்; வாழ்வாதாரத்திற்கே செலவிடப்பட வேண்டும். முதற்கட்டமாக விதவைப் பெண்களுக்கு ஒருவருக்கு ரூபா 150,000 வீதம் தற்போது தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்நிதியினை பயானாளிகளிடம் நேரடியாக கையளிக்காது பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் இருவரும் ஒத்த கருத்தின்படி சுயதொழில் முயற்சிக்கு செலவிடப்பட வேண்டும். யுத்தம் முடிந்து ஆறு வருடங்களாகியும் வெற்றியை விளம்பரப்படுத்த எடுக்கப்படும் அக்கறை யுத்தம் பிரசவித்த விதவைகளின் வாழ்வில் காட்டப்படவில்லை. அதனால் அவர்களில் சிறுதொகையினர் கலாச்சாரசீரழிவுகளில் ஈடுபடுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செய்திகள் உண்மையானவை என நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
இந்த அவலநிலை தொடர்பாக மாண்புமிகு ஜனாதிபதியுடன் தங்கள் செயலணி உடனடியாக ஒரு சந்திப்பை மேற்கொண்டு தற்போது தயாரிக்கப்படும் 2017 ஆண்டிற்கான வரவுசெலவு திட்ட முன்மொழிவுகளில் விதவைகளின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யவேண்டுமென ஒரு கோரிக்கையினை விடுக்குமாறு ஒரு வேண்டுகோளை உங்கள் முன் வைக்கின்றேன். உங்கள் அறிக்கை தயாராகி வெளிவந்து நிவாரணம் கிடைக்க நீண்டகாலம் எடுக்கும் என்பதினால் உடனடியாக ஜனாதிபதியைத் தொடர்பு கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

