மைத்திரியின் மற்றும் ஒரு எச்சரிக்கை!



கட்சியின் ஒழுக்கத்தை மீறி, கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் 40 பேருக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
கட்சியின் ஒழுக்கத்தை மீறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்பாளர் பதவிகளை மாத்திரமன்றி, பாராளுமன்ற ஆசனங்களையும் இழக்கும் நிலை ஏற்படும்.
நாட்டில், ஒரு கட்சியை உடைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி, ஆட்சியைப் பிடித்ததாக வரலாறு கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய காமினி திசநாயக்க மற்றும் லலித் அத்துலத் முதலி ஆகியோர் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், கை சின்னத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.