மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவு மின்தூக்கி (லிப்ட்) பழுந்தடைந்து காணப்படுவதால், கடந்த சில தினங்களாக பிரசவப் பெண்கள் சிரமப்படுவதுடன், சத்திர சிகிச்சைக்குரிய நேயாளர்களை மேல்மாடிக்கு காவிச் செல்வதில் ஊழியர்கள் சிரமப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மின்தூக்கி சுமார் 40 வருடங்கள் பழமை வய்ந்தது எனவும் அது அடிக்கடி பழுதடைவதாகவும் நோயாளர்களும் ஊழியர்களும் தெரிவிக்கின்றனர். மின்தூக்கி பழுதடைந்துள்ளதால் மேல்மாடியிலுள்ள நோயாளர்களை கீழ்த்தளத்துக்கும் சத்திர சிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்களை மேல்மாடிக்கும் படிகளில் கொண்டு செல்கின்றபோது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இது பற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பையிடம் கேட்டபோது,
'பழுதடைந்துள்ள இந்த மின்தூக்கியின் மோட்டார் திருத்த வேலைக்காக மின்தூக்கி பழுதுகள் திருத்தும் கம்பனிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வார காலத்துக்குள் மின்தூக்கி பழுது பார்க்கப்பட்டு சேவைக்காக மீண்டும் இயங்கத் தொடங்கும். அதுவரையில், நோயாளர்களை காவிச் செல்வதற்கு மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது' என்றார்.

