தர்மராஜ கல்லூரி முன்பாக மாணவர் மீது தாக்குதல்:



கண்டி – தர்மராஜ கல்லூரிக்கு முன்பாக மாணவர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மராஜ கல்லூரிக்கு முன்பாக மாணவர் ஒருவர் மீது சிலர் தாக்குதல் மேற்கொள்ளும் வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்தப் பாடசாலையில் 13 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபற்றி தாக்குலுக்கு உள்ளான மாணவர் தெரிவித்ததாவது,
நேற்று முன்தினம் நான் பாடசாலை செல்லும் போது 12 ஆம் தர மாணவர் ஒருவர் தலை முடியை வெட்டுமாறு எனக்கு கூறினார். அத்துடன், அவர் என்னை கெட்ட வார்த்தைகளால் பேசினார். அவ்வாறு பேசியமையினால் எனக்கு கோபம் ஏற்பட்டது. அதனால் அவரை ஒரு முறை அடித்தேன். அதன் பின்னர் அதிபர் பிரச்சினையை சமரசப்படுத்தினார். எனினும், பாடசாலை விட்டுச் செல்லும் போது அடையாளம் தெரியாத சிலர் என்மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இது குறித்து தர்மராஜ கல்லூரியின் அதிபர் தம்பிக்க வனசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,
கடந்த 21 ஆம் திகதி மாணவர் தலைவர் ஒருவருக்கும் 13 ஆம் தர மாணவர் ஒருவருக்கும் இடையில் தலை முடிவெட்டுதல் தொடர்பிலான பிரச்சினையொன்று ஏற்பட்டது. அதனை அறிந்து கொண்டதும் இருவரையும் அழைத்து அறிவறுத்தல் விடுத்து சமரசப்படுத்தினோம்.
என தெரிவித்தார்.
இதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் வினவியபோது, இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு முன்வைக்கப்படவில்லை எனவும் இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருடன் தாம் கலந்துரையாடியதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தயாரித்த அறிக்கை இன்று பிற்பகல் அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.