ஜெயலலிதா மரணத்தின் மர்மம் என்ன?



‘‘இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அவர்களுக்கு...
அன்புடையீர்,
நான், இந்தக் கடிதத்தை ஒரு சாதாரண இந்திய பிரஜையாக எழுதுகிறேன். நான், ஒரு குடும்பத் தலைவி; ஒரு தாய் மற்றும் பணியாற்றக் கூடிய பெண். என் வாழ்க்கையில் ஏற்படும் எல்லாத் துன்பங்களும் அதற்கான முக்கியத்துவம் கருதி நாட்டில் உள்ள சக மனிதர்களால் பகிரப்படுகிறது. இதில், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் முதன்மையானது.
பல கோடி மக்களைப்போலவே நானும், தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அவர், மிகச் சிறந்த தலைவர்; அத்துடன் அவர், பல பெண்களுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட அவருடைய ஆளுமைத் திறமை எப்போதும் ஒரு தூண்டுதலாகவே இருந்தது. தன்னுடைய பலத்தினால்... கஷ்டங்களை எதிர்த்துப் போராடும் ஜெயலலிதாவின் திறன்... ஆண், பெண் என எல்லோரும் தங்களுடைய கனவுகளை அடைய ஓர் உந்துதலாகவே இருந்துவந்தது.
அவருடைய மரணம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது மட்டும் அல்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல்... நடந்துவந்த சூழலும், பதில் தெரியாத சில கேள்விகளும் தொடர்ந்துகொண்டே இருந்தன. அவருடைய உடலில் ஏற்பட்ட பிரச்னைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, நலம் பெற்றார் என்ற தகவல் மற்றும் திடீர் மரணம்... இவை எதற்குமே பதில்கள் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை. அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் மூடி மறைத்த வண்ணமே காணப்பட்டது. மேலும், அவர் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்குள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை; அவர், உடல் நலம்பெற வேண்டும் என்று மனதார நேரில் சென்று வாழ்த்த நினைத்தவர்களுக்கும் அனுமதி இல்லை. மக்களின் பிரதிநிதியான ஒரு தலைவரின் நிலை எதற்காக ரகசியம் காக்கப்பட வேண்டும்.. அவரை, ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? அவரைப் பார்க்க அனுமதி இல்லை என்பதை யார் முடிவு செய்வது... ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் அக்கறை பற்றிய முடிவுகளை யார் எடுத்தார்கள்... மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? இதுபோன்ற பல கேள்விகள் தமிழக மக்களுக்கு உள்ளன. அவர்களுடைய குரலாகவே நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன்.
அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இறந்துவிட்டார். இதில், எந்தச் சந்தேகமும் இல்லை என சிலர் கூறினாலும், இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முக்கியக் காரணம், இந்தியக் குடிமகளான எனக்குக் கவலை தரக்கூடிய விஷயங்களைப் பற்றி அறிய வேண்டிய உரிமை எனக்குள்ளது. நாட்டினுடைய நிலைமையும், அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும். நமக்குப் பிடித்த தலைவருடைய நலனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது அவசியம். இதுபோன்ற, மிக முக்கிய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள கேள்விகள் கேட்காமல் இருக்கக் கூடாது. முக்கியமாக, அதற்கான பதில்கள் தெரியாமல் இருக்கவே கூடாது. நாட்டில் ஒரு தலைவருடைய நிலையைப் பற்றி அறியவே முடியாத பட்சத்தில் தனி மனிதருடைய உரிமையை எப்படிப் பெற முடியும்? மக்கள் அனைவரும், சுதந்திர இந்தியாவில் நடக்கும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.
இந்தக் கடிதத்தை நான் எழுதக் காரணம், நாட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எல்லாக் குடிமக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற என்னுடைய ஆதங்கத்தைப் பற்றி அறிந்து... பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான். நீங்கள் பல இடங்களில் தனி மனிதனுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர எந்த இடத்திலும் தயக்கம் இல்லாமல் செயல்பட்டிருக்கிறீர்கள். நாட்டு மக்களுடைய கோரிக்கையை கவனத்தில்கொண்டு பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’’
நம்பிக்கை மற்றும் மரியாதையுடன்,
ஜெய்ஹிந்த்!
கௌதமி தடிமல்லா