இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 260 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா 105 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 155 ஓட்டங்கள் முன்னிலையுடன் அவுஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 440 ஓட்டங்களைப் பெற்றது அவுஸ்திரேலியா.
இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 441 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 441 ஓட்டங்கள் என்பது சுலபமானது அல்ல. இருந்தாலும், இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்.
இருவரும் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறினார்கள். விஜய் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஓ’கீபே பந்தில் ஆட்டம் இழந்தார்.
லோகேஷ் ராகுல் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.
அடுத்து வந்த புஜாரா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் விராட் கோலி 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஓ’கீபே பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ரகானே (18), அஸ்வின் (8), சகா ஆகியோரையும் ஓ’கீபே வெளியேற்றினார்.
31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் புஜாராவை 6 ஆவது விக்கெட்டாக ஓ’கீபே வெளியெற்றினார்.
அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ் விக்கெட்டுக்களை லயன் வீழ்த்தி இந்தியா 33.35 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடித்து 107 ஓட்டங்களுடன் சுருண்டது.
இதனால் அவுஸ்திரேலியா 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
ஓ’கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.

