யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா. வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து கருத்து வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது,
2015 இல் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகள் வழங்கிய போது செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. வில் உரையாற்றினார். அந்த உரை 4 தூண்களின் அடிப்படையிலானவை. முதலாவது தூண் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பது. இரண்டாவது நட்டயீடுகள், கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பது. மூன்றாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்பது. நான்காவது இனி நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது. இந்த நான்கும் நடைபெற வேண்டும். நான்கில் ஒன்று மற்றதுக்கு மாற்றீடாக அமைய முடியாது. உண்மை கண்டறியப்பட வேண்டியது முக்கியமான விடயம். இதனாலேயே நீதி கடத்தப்படக் கூடாது என்று கூற முடியாது. இனி நிகழாமைக்கான உத்தரவாதம் தேவையில்லை என்று சொல்ல முடியாது. உண்மை கண்டறியப்படுவதற்கான பொறிமுறை கண்டறியப்பட்டால் நாம் வரவேற்போம்.

