ஜெயலலிதாவின் தோழி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் ஒதுக்கிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான அ.இ. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவின் தலைமையில் ஒரு பிரிவாகவும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தது. அதற்குப்பிறகு சசிகலா தலைமையிலான அணியைச் சேர்ந்த எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது குறித்துப் பேச்சு வார்த்தை நடக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. திங்கட்கிழமையன்று இரவில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் ஆலோசனையும் நடத்தினர்.
தற்போது அ.தி.மு.க. அம்மா அணியை வழிநடத்திவரும் டிடிவி தினகரன் சென்னையில் இல்லாத நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திங்கட்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கடுமையாகச் சாடினார்.
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி. ராமச்சந்திரனும் ஜெயலலிதாவும் தங்களது குடும்பத்தினருக்கு கட்சியில் எந்தப் பதவியும் தராத நிலையில், சசகலா குடும்பத்தினர் தற்போது அ.தி.மு.கவைக் கைப்பற்ற நினைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

Post a Comment
Post a Comment