பலத்த மழை – தெற்கில் வெள்ளம்



காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்துவருகிறது.
ஜின் கங்கையில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பத்தேகம, தவளம, நாகொட மற்றும் வெளிபிடிய உள்ளிட்ட தாழ்வுப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காலி மாவட்டத்தில் பொதுவாக வெள்ளத்தின் போது மூழ்காத பிரதேசங்களிலும், தற்போழுது மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 6 மணித்தியாலங்கள் தொடர்ந்தும் மழை பெய்தால், களனி கங்கைக்கு அண்மித்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக களனி கங்கையை அண்மித்து வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
களு கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால் அங்கு வாழும் மக்களும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.