முன்னாள் அமைச்சர்,சட்டத்தரணி A.R.A மன்சூர் காலமானார்



#இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்
முன்னாள் அமைச்சர் அப்துல் ரஸ்ஸாக் மன்சூர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(25) செவ்வாய்க்கிழமை சற்றுமுன்னர் காலமானார்.

சட்டத்தரணியான A.R.மன்சூர், முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர்.ஜெயவர்த்தன,ரணசிங்க பிரேமதாச ஆகியோரின் அமைச்சரவையிலும் பணிபுரிந்துள்ளார். வணிக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான அவர், குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதவராகவும் பணிபுரிந்துள்ளார்.

அம்பாரை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காகவும் அயராது பதினேழு வருடங்கள் உழைத்த, நேர்மையான ஒழுக்கமான அரசியல் தலைமையாக ஏ. ஆர். மன்சூர் விளங்கினார்.

கல்முனை மண்ணை மாநகரமாக மாற்றியமைத்து தந்த முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள் தனது அமைச்சை சரியாக பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை செய்த ஒருவராவார். பல அரசியல் தலைவர்களையும், அமைச்சர்களையும் கண்ட கல்முனை மண்ணில் இவரது காலத்தில் செய்யப்பட்ட சேவைகளே இப்போதும் கல்முனையை அலங்கரிப்பது இவரது ஆளுமைக்கும் சேவைக்கும் சிறந்த உதாரணமாகும்.

இலங்கை வங்கி கட்டிடம், கல்முனை பொதுச்சந்தை,வீடமைப்பு அதிகார சபை கட்டிடத்தொகுதி ,மேலும் பல பாடசாலை கட்டிடங்கள் இன்றும் வலிமையுடன் தலைநிமிர்ந்து நின்று கல்முனையை அலங்கரிப்பது இவரின் ஆளுமையின் வெளிப்பாடாகும்.

சட்டத்தரணி மரீனா மன்சூர், S.L.MC தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூரினதும் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜனாஸா கொழும்பு திம்பிரிக்கஸ்யாயவில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று (25) செவ்வாய்க்கிழமை மாலை அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அன்னாருக்கு வல்ல அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தைக் கொடுப்பானாக! ஆமீன்!!!