திருகோணமலையில் சுற்றிவளைப்பு



திருகோணமலை நகரத்தில் காலாவதியான உப்பு பொதிகளை திகதி மாற்றப்பட்டு விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பாவனையாளர் அதிகார சபையினர் இன்று (17) சுற்றிவளைப்பினை மேற்கொண்டு உப்பு பொதிகளை கைப்பற்றியுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட 900 ற்கும் மேற்பட்ட உப்பு பொதிகளில் பொதி செய்யப்பட்ட திகதிக்கு மேலாக புதிதாக காலாவதியாகும் திகதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

உப்பு பொதிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக உப்பு பைக்கட்டுக்களை வழங்கிய பிரதான உற்பத்தியாளர்களை கண்டுபிடித்து விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட உரிமையாளர் திருகோணமலையில் மொத்த வியாபாரம் செய்பவர் எனவும் தெரியவந்துள்ளது. 

காலாவதியான உப்பு பொதிகளை வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்தனர். 

இதேவேளை திருகோணமலை நகரம் மட்டுமல்லாது அனைத்து கிராமங்களுக்கும் சென்று சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்தனர்.