கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய ஆடை



இன்று முதல் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கான புதிய ஆடை ஒன்று கல்வி அமைச்சில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந்த ஆடை அறிமுகம் மற்றும் அதற்கான சுற்று நிரூபம் வெளியிடும் நிகழ்வு இன்று (24) கல்வி அமைச்சில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் ஆகியோர் அதிதிகளாக கலந்துக் கொண்டு ஆரம்பித்து வைத்தனர். 

இவர்களுடன் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, வைத்தியர்கள், பல்கலைகழக விரிவுரையாளர்கள், அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டார்கள். 

பாடசாலை முறைமையில் தற்போது கற்றல், கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 236,000 ஆசிரியர்களில் 172,000 ஆசிரியைகள் உள்ளதாகவும், இதில் வருடாந்தம் சுமார் 10,000 ஆசிரியைகள் மகப்பேற்று விடுமுறையில் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆசிரியைகள் கர்ப்பக் காலத்திலும் தமது தொழில்சார் கௌரவம், சம்பிரதாயம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்க கூடிய வகையில் ஆடை அணிகலங்களைப் பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். 

இதனால் அவர்களுடைய நலன் கருதி சுமார் 06 வடிவங்களில் இந்த ஆடை அறிமுகம் செய்யபட்டுள்ளது. 

இதேவேளை இந்த ஆடை கட்டாயமல்ல என்பதுடன், கர்ப்ப காலத்தில் ஆசிரியைகளின் விருப்பத்திற்கமைய பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

(மலையக நிருபர் திருஞானம்)