"இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர் சுலேமானீ" -


இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், காசெம் சுலேமானீயை கொன்றது போர் ஏற்படுவதைத் தடுக்கவே தவிர, போரை ஏற்படுத்த அல்ல என்று குறிப்பிட்டார்.
"அமெரிக்காவிடம் உலகிலேயே மிகச் சிறந்த ராணுவம், மிகச் சிறந்த புலனாய்வு அதிகாரிகளும் இருக்கிறார்கள். அமெரிக்கர்கள் மிரட்டப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுக்கத் தயாராகவே இருப்போம்" என்று டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், காசெம் சுலேமானீ, உலகில் உள்ள அப்பாவி மக்களைக் கொல்லத் தீவிரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட நபர் என்றும் டெல்லி மற்றும் லண்டன் போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்குக் காரணமானவர் என்றும் குறிப்பிட்டார்.
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு பல இடங்களில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் டிரம்ப் கூறினார்.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்ரேல் வெளியுறவு அதிகாரி காரில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை டிரம்ப் கூறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கர்களை தாக்க முயற்சித்தால்…

"அமெரிக்கர்களை தாக்கினால், அல்லது தாக்க முயற்சி செய்தால், என் தலைமையிலான அரசு பார்த்துக் கொண்டிருக்காது. நாங்கள் உங்களை கண்டுபிடித்து அகற்றுவோம். அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்கர்கள் மற்றும் எங்கள் கூட்டணியில் இருப்பவர்களை பாதுகாப்போம்."

என்ன நடந்தது?

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.
இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் காசெம் சுலேமானீயை கொன்றது.
''இந்த தாக்குதலை நடத்திய குற்றவாளிகளுக்குக் கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை காத்திருக்கிறது'' என்று இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி எச்சரித்துள்ளார்.
Presentational grey line

யார் இந்த காசெம் சுலேமானீ?

சுலேமானீ"படத்தின் காப்புரிமைANADOLU AGENCY/GETTY IMAGES
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவர் ஜெனரல் காசெம் சுலேமானீ.
இரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். 1998 ஆண்டு முதல் காசெம் சுலேமானீ, இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்து வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
இரானின் புரட்சிகர ராணுவ படையானது, அந்நாட்டின் இஸ்லாமிய கட்டமைப்பை பாதுகாக்க 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது.
இந்த படையின் Quds என்ற பிரிவு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கூட்டணி அரசுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழுவிற்கு ரகசியமாக பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரானின் ஆதிகத்தை மத்திய கிழக்கு பகுதிகளில் விரிவுபடுத்தும் லட்சியம் முன்னெடுக்கப்பட்டது.


இதற்கு பின்னால் இருந்த முக்கிய புள்ளிதான் காசெம் சுலேமானீ. போர் என்று வரும்போது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்று இவர் செயல்பட்டார் என்கிறார் பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லைஸ் டவுசட்.