நேரு பல்கலைக்கழக வளாகத்தில்,தாக்குதல்


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, இதனை கண்டித்து டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்பட நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளது.
நேற்று மாலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவருமான ஒய்ஷி கோஷ் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட தாக்குதல்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சபர்மதி விடுதியில் குழுமியிருந்த மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக தாக்குதலைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும் நள்ளிரவில் டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்பாகவும் போராட்டங்கள் நடைபெற்றன.
டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்பாக நடந்த போராட்டம்படத்தின் காப்புரிமைPIYUSH NAGPAL / BBC
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதனிடையே வன்முறை நடைபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் டெல்லி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஜே.என்.யு. தாக்குதலை கண்டித்து நள்ளிரவில் மும்பை கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கேட்வே ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்படத்தின் காப்புரிமைSUPRIYA SOGLE / BBC
இந்த போராட்டத்தில் மும்பை நகரில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று, ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திலும் ஜே.என்.யு. தாக்குதலை கண்டித்து நள்ளிரவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் ஹைதராபாத்தில் அம்பேத்கர் சிலை அருகே ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் தாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.